ரெ கா பால முருகன்
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முக்கிய சமூகம் சார்ந்த செயல்திட்டங்களை கமிஷன் அடிப்படையில் தொண்டு நிறுவனங்களிடம் அளித்து செயல்படுத்துவது பற்றி பரிசீலிக்குமாறு அகில இந்திய காங்கிரசின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி அவர்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேசீய ஆலோசனைக் குழுவைக் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கான காரணம் என்னவென்றால் மக்களுக்கான நலத் திட்டங்களுக்கான ஒதுக்க்கீட்டில் குறிப்பிட்ட பயனாளிகளை சென்றடையும் பணப்பயனானது 1 ரூபாயில் கிட்டத்தட்ட 15 காசுதான் என்பதாக உள்ளது. டெக்கான் க்ரானிகிள் - 21/06/2010 முதற்பக்கச் செய்தி.
இந்தச் செய்தியைப் பார்த்தால் இதில் என்ன தவறு, அரசின் நலத் திட்டங்களை மக்களிடம் முழுமையாகக் கொண்டு செல்ல தனியார் நிறுவனங்களைப் பயன் படுத்திக் கொள்வதில் தவறில்லை என நமது படித்த மக்கள் அனைவரும் நம்பும் சாத்தியம் அதிகம். உண்மை என்னவாக இருக்கும் என்பதை நாம் தொலை நோக்குப் பார்வையுடன் அணுகாவிட்டால் நமது தலையில் நம்மை வைத்தே மிளகாய் அரைக்கும் தந்திரம்தாம் இந்த முயற்சி.
21.06.2010 அன்றைய தினமலர் நாளிதழ் பார்த்தவர்கள் அதில் கடம் வாசிப்பில் போட்ட செய்தியைப் படித்துப் பார்த்தால் இதன் விபரீதம் புரியும். அந்தச் செய்தியை தினமலரில் ஏன் வெளியிட்டார்கள் என்பதை எண்ணிப் பார்த்தால் அது தினமலர் சாராத இனம் என்பதால்தான் என்பதை தனிக் கட்டுரையாக எழுதலாம். அதாவது குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுக்க முயலும் தனியார் தொண்டு நிறுவனமானது குழந்தைத் தொழிலாளர்களுக்கு படிப்பிற்காக பணம் அளித்த நிலையில் அந்தக் குழந்தைகள் மேடையை விட்டு இறங்குமுன் அந்தப் பணக்கவரை திரும்பப் பெற்றுக் கொண்டன என்பதுதான் சாராம்சம். இது அந்த மாவட்ட அரசு நலத்திட்ட அதிகாரிகள் முன்னிலையிலேயே நடை பெற்றதாக அந்தச் செய்தி தெரிவிக்கின்றது.
இதுதான் தனியார் தொண்டு நிறுவனங்களின் யோக்கியதை அல்லது லட்சணம். லட்சங்களை விடுத்து கோடிகள் லட்சியமாகி விட்ட பொழுதில் தொண்டு நிறுவனங்களின் லட்சணம் இப்படித்தானேயிருக்கும். இதில் அரசுப் பணத்தில் கொள்ளையடிக்க அரசே வாய்ப்பையேற்படுத்திதர முனைவதுதான் வேதனை. அதையும் இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் வாரிசான ராகுல்காந்தி புரிந்தோ புரியாமலோ பேசியிருப்பதுதான் வேடிக்கை.
புரிந்தோ புரியாமலோ என்று ஏன் சொல்ல வேண்டியுள்ளது என்றால் அவருக்குள் இந்தச் சிந்தனையை விதைத்தவர்கள் தங்கள் சமூகத்தை அரசுப் பணிகளில் இனிமேல் காப்பாற்ற இயலாமல் போகும். அப்படியொரு நிலையில் நமது இனத்தவர்கள் தேச சேவை மற்றும் தொண்டுள்ளம் என்று பெயரிட்டுக் கொண்டு இனச் சேவையை எந்தவித இட ஒதுக்கீட்டுச் சிக்கல்களும் இல்லாமல் வழக்கம்போல் தொடரவும், யாரிடமும் கையேந்தாமல், வரவு செலவுகளுக்கு அஞ்சாமல் இருக்கவும் அரசின் நலத் திட்ட ஒதுக்கீடுகளை ஒதுக்க முனையும் தந்திரத்தால்தான்.
இந்த தேசிய ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றுள்ள நபர்கள் யார்? அவர்களின் இந்த பன்முகப்பட்ட சமுதாயத்தை பிரதிபலிக்கக் கூடியவர்களாயிருக்கும் சாத்தியமுள்ளதா? பலதரப்பட்ட சமூகப் பிரிவுகளின் பிரச்சனைகளை உணர்ந்தவர்களாகவோ, அவற்றின் தாக்கங்களை உள் வாங்கியவர்களா? என்பது போன்ற அடிப்படையான கூறுகள் பற்றி எதுவும் தெரியாத பட்சத்தில் இது குறித்து சமூக நீதிக்கான இயக்கங்களும் அரசியல் வாதிகளும் விழிப்புடனிருக்க வேண்டும்.
அப்படியிருப்பவர்களிலும் தங்கள் சமூகம் இதனால் எவ்விதம் பாதிப்படையும் என்பதை உணர்வதுடன் அதற்காக போராடக் கூடியவர்களாயிருக்க வேண்டும். மனுதர்ம வாதிகளிடம் கொள்கையைச் சரணடைய விடும் மனம் படைத்தவர்களைத்தான் மனுதர்மம் வளர்த்து விடும், நல்லவர் என்று தனது ஊடகங்கள் மூலம் பரப்பும் அதன் தந்திரத்தில் மயங்குபவர்களல்லாத நம்மவர்களை எந்தெந்த முறையில் அலைக்கழிக்க முடியுமோ அந்தந்த முறையில் அலைக்கழிக்கும்.
மக்களுக்காய் உழைக்கும் பொழுதில் ஏற்படும் சலிப்புக்கும் வெறுப்புக்கும் நம்மவர்கள் ஆட்படாமல் இது போன்ற விஷயங்களில் விழிப்புடன் செயல் பட வேண்டும். அப்படியில்லையென்றால் எல்லாக் கொள்ளைப் புறங்கள் வழியாகவும் எதேனும் ஒரு பிரச்சனையுடன் நமது சமூக முன்னேற்றத்தை தடுக்கவும் அல்லது முடிந்தால் அழிக்கவும் ச்மூக நீதியின் எதிராளிகள் விழிப்புடன் உள்ளனர் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
- முதன் முதலில் கீற்று வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக