ஞாயிறு, 18 ஜூலை, 2010

மக்களின் வரிப்பணத்தை தொண்டு நிறுவனங்களுக்குத் திசைதிருப்பும் புதுமையான தந்திரத்தில் பார்ப்பனீயம்.

மக்களின் வரிப்பணத்தை தொண்டு நிறுவனங்களுக்குத் திசைதிருப்பும் புதுமையான தந்திரத்தில் பார்ப்பனீயம்.

ரெ கா பால முருகன்

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முக்கிய சமூகம் சார்ந்த செயல்திட்டங்களை கமிஷன் அடிப்படையில் தொண்டு நிறுவனங்களிடம் அளித்து செயல்படுத்துவது பற்றி பரிசீலிக்குமாறு அகில இந்திய காங்கிரசின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி அவர்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேசீய ஆலோசனைக் குழுவைக் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கான காரணம் என்னவென்றால் மக்களுக்கான நலத் திட்டங்களுக்கான ஒதுக்க்கீட்டில் குறிப்பிட்ட பயனாளிகளை சென்றடையும் பணப்பயனானது 1 ரூபாயில் கிட்டத்தட்ட 15 காசுதான் என்பதாக உள்ளது. டெக்கான் க்ரானிகிள் - 21/06/2010 முதற்பக்கச் செய்தி.

இந்தச் செய்தியைப் பார்த்தால் இதில் என்ன தவறு, அரசின் நலத் திட்டங்களை மக்களிடம் முழுமையாகக் கொண்டு செல்ல தனியார் நிறுவனங்களைப் பயன் படுத்திக் கொள்வதில் தவறில்லை என நமது படித்த மக்கள் அனைவரும் நம்பும் சாத்தியம் அதிகம். உண்மை என்னவாக இருக்கும் என்பதை நாம் தொலை நோக்குப் பார்வையுடன் அணுகாவிட்டால் நமது தலையில் நம்மை வைத்தே மிளகாய் அரைக்கும் தந்திரம்தாம் இந்த முயற்சி.

21.06.2010 அன்றைய தினமலர் நாளிதழ் பார்த்தவர்கள் அதில் கடம் வாசிப்பில் போட்ட செய்தியைப் படித்துப் பார்த்தால் இதன் விபரீதம் புரியும். அந்தச் செய்தியை தினமலரில் ஏன் வெளியிட்டார்கள் என்பதை எண்ணிப் பார்த்தால் அது தினமலர் சாராத இனம் என்பதால்தான் என்பதை தனிக் கட்டுரையாக எழுதலாம். அதாவது குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுக்க முயலும் தனியார் தொண்டு நிறுவனமானது குழந்தைத் தொழிலாளர்களுக்கு படிப்பிற்காக பணம் அளித்த நிலையில் அந்தக் குழந்தைகள் மேடையை விட்டு இறங்குமுன் அந்தப் பணக்கவரை திரும்பப் பெற்றுக் கொண்டன என்பதுதான் சாராம்சம். இது அந்த மாவட்ட அரசு நலத்திட்ட அதிகாரிகள் முன்னிலையிலேயே நடை பெற்றதாக அந்தச் செய்தி தெரிவிக்கின்றது.

இதுதான் தனியார் தொண்டு நிறுவனங்களின் யோக்கியதை அல்லது லட்சணம். லட்சங்களை விடுத்து கோடிகள் லட்சியமாகி விட்ட பொழுதில் தொண்டு நிறுவனங்களின் லட்சணம் இப்படித்தானேயிருக்கும். இதில் அரசுப் பணத்தில் கொள்ளையடிக்க அரசே வாய்ப்பையேற்படுத்திதர முனைவதுதான் வேதனை. அதையும் இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் வாரிசான ராகுல்காந்தி புரிந்தோ புரியாமலோ பேசியிருப்பதுதான் வேடிக்கை.

புரிந்தோ புரியாமலோ என்று ஏன் சொல்ல வேண்டியுள்ளது என்றால் அவருக்குள் இந்தச் சிந்தனையை விதைத்தவர்கள் தங்கள் சமூகத்தை அரசுப் பணிகளில் இனிமேல் காப்பாற்ற இயலாமல் போகும். அப்படியொரு நிலையில் நமது இனத்தவர்கள் தேச சேவை மற்றும் தொண்டுள்ளம் என்று பெயரிட்டுக் கொண்டு இனச் சேவையை எந்தவித இட ஒதுக்கீட்டுச் சிக்கல்களும் இல்லாமல் வழக்கம்போல் தொடரவும், யாரிடமும் கையேந்தாமல், வரவு செலவுகளுக்கு அஞ்சாமல் இருக்கவும் அரசின் நலத் திட்ட ஒதுக்கீடுகளை ஒதுக்க முனையும் தந்திரத்தால்தான்.

இந்த தேசிய ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றுள்ள நபர்கள் யார்? அவர்களின் இந்த பன்முகப்பட்ட சமுதாயத்தை பிரதிபலிக்கக் கூடியவர்களாயிருக்கும் சாத்தியமுள்ளதா? பலதரப்பட்ட சமூகப் பிரிவுகளின் பிரச்சனைகளை உணர்ந்தவர்களாகவோ, அவற்றின் தாக்கங்களை உள் வாங்கியவர்களா? என்பது போன்ற அடிப்படையான கூறுகள் பற்றி எதுவும் தெரியாத பட்சத்தில் இது குறித்து சமூக நீதிக்கான இயக்கங்களும் அரசியல் வாதிகளும் விழிப்புடனிருக்க வேண்டும்.

அப்படியிருப்பவர்களிலும் தங்கள் சமூகம் இதனால் எவ்விதம் பாதிப்படையும் என்பதை உணர்வதுடன் அதற்காக போராடக் கூடியவர்களாயிருக்க வேண்டும். மனுதர்ம வாதிகளிடம் கொள்கையைச் சரணடைய விடும் மனம் படைத்தவர்களைத்தான் மனுதர்மம் வளர்த்து விடும், நல்லவர் என்று தனது ஊடகங்கள் மூலம் பரப்பும் அதன் தந்திரத்தில் மயங்குபவர்களல்லாத நம்மவர்களை எந்தெந்த முறையில் அலைக்கழிக்க முடியுமோ அந்தந்த முறையில் அலைக்கழிக்கும்.

மக்களுக்காய் உழைக்கும் பொழுதில் ஏற்படும் சலிப்புக்கும் வெறுப்புக்கும் நம்மவர்கள் ஆட்படாமல் இது போன்ற விஷயங்களில் விழிப்புடன் செயல் பட வேண்டும். அப்படியில்லையென்றால் எல்லாக் கொள்ளைப் புறங்கள் வழியாகவும் எதேனும் ஒரு பிரச்சனையுடன் நமது சமூக முன்னேற்றத்தை தடுக்கவும் அல்லது முடிந்தால் அழிக்கவும் ச்மூக நீதியின் எதிராளிகள் விழிப்புடன் உள்ளனர் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

- முதன் முதலில் கீற்று வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது.

சனி, 13 மார்ச், 2010












"பேராண்மை"யுடன் ஒரு திரைக்காவியம்

ரெ கா பால முருகன்

தங்கள் தயாரிப்பில் முற்றிலும் வணிக நோக்கோடு தயாரிக்கப்பட்ட படங்கள் அனைத்தும் தோல்விப் படங்களாக அமைந்த நிலையில், இயக்குனர் ஜனநாதன் மற்றும் ஜெயம் ரவி கூட்டணியில் தீபாவளியன்று வெளி வந்த பேராண்மை பெரும் வெற்றிப் படமாகியுள்ளது என்று கூறியுள்ளார் ஐங்கரன் படத் தயாரிப்பு நிறுவனர்களில் ஒருவரான அருண்பாண்டியன்.

வழக்கமான நான்கு பாட்டு (அதில் ஒன்று குத்துப் பாட்டு என்பதை நாம் குறிப்பிடத் தேவையில்லை), ஐந்து சண்டை, கவர்ச்சிக் கன்னியரை விஞ்சும் கதா நாயகி, பழி வாங்கத் துடிக்கும் அப்பாவி நாயகன் இதனுடன் சில பல தொழில் நுட்ப சமாச்சாரங்கள் என்ற விஷயங்களை நம்பியே பல முண்னணி உள்ளூர் நாயகர்களும், உலக நாயகர்களும் அவர்கள் சொற்படி கேட்கும் மெகா மற்றும் மகா இயக்குனர்களும் நிறைந்து கிடக்கும் தமிழ் திரைப்படத் துறை. இதையெல்லாம் பார்த்து தங்களின் திறமையால் முன்னுக்கு வந்த இயக்குனர்களும் பேந்தப் பேந்த தங்கள் விழி பிதுங்கி ராஜேஷ் குமார் பாஷையில் "ஙே" என்று விழித்தபடியிருக்கும் நிலையில் தனது மூன்றாவது படத்தையும் தெளிவான சிந்தனைகளுடன் சமூகத்திற்கு பயன் தரத் தக்க வகையில் தனது கொள்கைகளுடன் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் வெற்றிப் படமாக உருவாக்கியுள்ள ஜனநாதன் பெரும் பாராட்டுதலுக்குரியவராவார்.

ஜனநாதன் உலகை உலுக்கிய காதல் காவியமான ஃபியோதர் தாஸ்தாயேவ்ஸ்கியின் "வெண்ணிற இரவுகள்" கதையை நமது தமிழ்ச் சூழலுக்கேற்ப மூலக் கதையின் இனிமை கெடாது "இயற்கை"யான காதல் காவியமாக்கி வெற்றி கண்டவர்.தனது இரண்டாவது படமான "ஈ" யில் பன்னாட்டு பகாசுர நிறுவனங்களின் வியாபார நோக்கைச் சாடி தனது சமூக அக்கறையை வெளிப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது மூன்றாவது கதைத் தளத்தை இட ஒதுக்கீட்டில் பலனடைந்த கதாநாயகன் எத்தகைய அவமானங்களுக்கும், நிராகரிப்புகளுக்கும், ஏமாற்றங்களுக்கும் ஆளாக்கப்பட்டும் தனது பணியில் தொய்வின்றி நாட்டுக்கெதிரான சக்திகளுடன் போராடி வெற்றி பெறுவதாய் அமைத்துள்ளார். நாயகனின் பாத்திரம் உள்ளூர்ப் பிரச்சனைகளான உதாசீனங்கள், தீண்டாமை போன்ற அவமானகரமான கையறு நிலைகளில் அவற்றை மனதுக்குள் புதைத்து விட்டு தனது வேலைகளைக் கவனிப்பதானது பலவித பணிகளில் இதுபோன்றவர்களுக்கு தினமும் நிகழும் அவலம் என்றால் மிகையல்ல. அவனது திறமைகளில் குளிர் காயும் மேல் தட்டு வர்க்கத்தையும் தோலுரித்துக் காட்டும் இயக்குனர் தனது வசனங்களையும், காட்சியமைப்புகளையும் தானே தீவிர தணிக்கையாளராய்ச் செப்பனிட்டதின் மூலம் பொதுவாக இத்தகைய சூழலில் எந்த ஒரு மனிதனுக்கும் நிகழும் சுயபச்சாதாப உணர்வைத் தாண்டிச் செல்கிறார். அதன் மூலம் பல படிகள் உயர்ந்தும் செல்கிறார்.







ஒரு காலத்தில் சுதந்திர உணர்வுகளைத் தாங்கிச் சென்ற திரைப்படங்கள் பின்னர் திராவிடக் கருத்துக்களைத் தெருவெங்கும் கொண்டு செல்லக் காரணமாயிருந்தன. தாராள மயமாக்கலில் எதைத்தான் தாராளமயமாக்குகின்றோம் என்ற உணர்வற்ற சூழலில் பல முனைத் தாக்குதல்களால் தறிகெட்டு குறிக்கோளின்றி அலையும் இளைய சமுதாயத்தை நெறிப்படுத்த சரியான ஆளுமையில்லாத கட்சிகளும், சந்தேகங்களுக்கு அப்பாற்பட்ட் தலைமைகளும் இல்லாது தடுமாறும் நிலையில் தனி மனிதனாக ஆளுமை மிகுந்த திரைத் துறையின் மூலம் தன் பங்களிப்பைச் செவ்வனே செய்துள்ளார் இயக்குனர்.

ஐந்து கதாநாயகிகளுடன் ஒரு கதாநாயகன் என்றாலே நமது இயக்குனர்கள் மற்றும் ரசிகர்களின் எண்ணங்கள் பயணிக்கும் திசை என்னவாகயிருக்கும் என்பது திரையுலகின் எழுதப்படாத விதி. ஆனால் மேலே கூறியவாறு சமூக உணர்வே இல்லாத நவீனமான சில தேசீயப் பாதுகாப்புப் படை மாணவிகளுக்கு மலைஜாதியைச் சேர்ந்த பயிற்சியாளர் நியமிக்கப்படுவதும், அதை அந்தப் பெண்கள் அருவருப்பாக உணர்வதும் இயல்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

//கதைப் போக்கில் பார்த்தோமேயானால் யார் உயரிய குணம் படைத்தோர் என்பதும் நவீனம் எப்படியெல்லாம் நம்மை நான்,எனது மற்றும் எனது வளர்ச்சிக்கென எத்தகைய செயல்களையெல்லாம் செய்யத் தூண்டுவதாயுள்ளது என்பதையும் மனதைத் தொடும் வண்ணம் சொல்லிச் செல்கின்றது இத் திரைக் காவியம்.//

மார்க்ஸின் "Surplus" தத்துவத்தை திரையில் சொல்ல முடியுமா? முடியும், அதுவும் எளிமையான உதாரணங்களால் என கதாநாயகன் வாயிலாக எளிமையாய்க் கூறுகிறார் இயக்குனர். மேலதிகாரி நாயகன் மீது காட்டும் வக்கிரத்தைக் நாயகன் கண்டு கொள்ளாது மேலதிகாரி சொன்ன செயல்களைச் செய்வது மனதைச் சுடும் காட்சியென்றால் அந்த நேரம் பார்த்து தங்கள் பையனின் திறமையைக் காண வரும் பழங்குடியினத்தவரிடம் "பார்த்துட்டங்கள்ள, போங்கடா, போங்க. இனியாவது ஒங்கள்ட்ட இருக்கிறத யாருக்கும் தராம, ஒங்க கொழந்தைங்கள படிக்க வையுங்க" எனும் வடிவேலு நெஞ்சில் நிறைகிறார்.பழங்குடியின மக்களிடம் அவர்தம் விளை பொருட்களை வங்கிக் கொண்டு தன்னை எதிர்த்துக் கேள்வி கேட்ட, அவமானத்திற்காக அவர்களை ஊரைக் காலி செய்ய வைக்கும் மேலதிகாரியாக பொன்வண்ணன் தனது பங்கை சிறப்புறச் செய்துள்ளார்.

"படிக்கலைன்னத்தான் அடிப்பாங்கன்னா, படிக்கிறதுக்கும் அடிக்கிறாங்களே" என்ற மலைவாழ் சிறுவர்களின் கேள்வியும், தான் ஆங்கிலத்தில் பேசினால் "எங்களுடைய மக்களுக்குப் புரியாது, உங்களுக்குப் பிடிக்காது" என்று ஜெயம் ரவி கூறுவதும், நிர்வாணம், குலக்கல்வி மற்றும் பெண்கள் மாராப்பை சரிசெய்வதும், நகர்ப்புறப் பெண்கள் முடி ஒதுக்குவதும் குறித்த வசனங்கள் படத்தின் வெற்றிக்குப் பங்களித்துள்ளன.

சில திரையரங்குகளில் தணிக்கைத் துறையின் கட்டுப்பாட்டால்தான் வசனங்கள் விடிபட்டுப் போயுள்ளது என தட்டி வைக்கப்பட்டுள்ளதிலிருந்து , இந்தப் படத்தின் வெற்றியைத் திரைப்படத் தணிக்கைக் குழு உறுதி செய்துள்ளது என்றே கூறலாம். ஏனென்றால் அவர்கள் தணிக்கையால் விடுபட்ட வசனங்களை என்னவாகயிருக்கும் என்று உணர எத்தனிக்கும் ஆர்வம் திரையரங்குகளில் ஆரவாரமாய்ப் பெருகுகின்றது.






தங்களின் விளை பொருட்களை பணிவுடன் பிறருக்கு கொடுத்து உதவுபவர்களையும், பிறரின் பொருட்களை அதிகாரப் பிச்சையாக அபகரிக்கும் நபர்கள் யார் என்பதையும், செய்யாத செயல்களின் பாராட்டுதல்களை ஓடோடிச் சென்று பெறுபவர்கள் யார் என்பதையும், செய்த செயலின் விளைவுகளை அனுபவிக்க இயலாது போயினும் தங்களுக்குத் தரப்பட்ட பணியில் கவனம் செலுத்துபவர் யார் என்பதையும் மிகைப்படுத்தல் இன்றி சொன்ன இயக்குனரும், முழுப்படத்திலும் இயக்குனரின் கருத்தறிந்து அமைதியாகத் தன் பணியிணை சிறப்புறச் செய்த ஜெயம் ரவியும் மிகுந்த பாராட்டுதலுக்குரியவர்கள்.மாணவிகளாய் வரும் ஐந்து பெண்களும் தங்கள் பாத்திரமறிந்து நடித்துள்ளனர்.

சதீஷ் குமாரின் காமிரா காடுகளினூடே தொலைந்து போனது போல் நம் கண்ணுக்குக் காடுகள் மட்டும்தான் தெரிகின்றன.நவீன தொழில் நுட்பத்தில் கிட்டத்தட்ட் ஒரு ஹாலிவுட் திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வை காமிராக்காரரும், கதை நிகழும் இனிய களமான களக்காடு, முண்டந்துறைப் பகுதிகளும், இயக்குனரும் உருவாக்கியுள்ளனர். இப்படிப் பாராட்டப்பட வேண்டிய பல விஷயங்கள் இருப்பதால் கிஸ்ஸிங்கரை வீழ்த்தும் கடைசிக் கட்ட சண்டைக் காட்சியை பெரிது படுத்தத் தேவையில்லை என்றே தோன்றுகின்றது.

நல்ல சமூகக் கருத்துக்களை பெருவாரியான மக்கள் ரசிக்கும்படி, அவர்களின் கவனத்தில் தைக்கும்படி படமாக்கியுள்ளதுடன் அந்தப் படம் வெற்றிகரமானதாயிருக்கும்படிக் கொடுத்ததன் மூலம், நல்ல கருத்துக்களை சொல்ல வேண்டிய விதத்தில் சொன்னால் மக்கள் அதை நிராகரிக்க மாட்டார்கள் என்று மறுபடியும் ஒருமுறை மக்களை மலினப்படுத்தும் இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் பாடம் எடுத்த இயக்குனர் ஜனநாதன் நமக்கு நல்லதொரு படத்தைக் கொடுத்துள்ளார்.

இயக்குனரின் இத்தகைய முயற்சிகள் மென்மேலும் தொடரவும், பலர் புரிந்து கொள்ளவும் வாழ்த்துவோம்.